Skip to main content

மதித்து வாழ்....

                 திருமணம் முடிந்து ஏழு வருடங்களில் கணவன் விபத்து ஒன்றில் சிக்கி இறந்து விடவே, தன் 6 வயது மகளுடன் சீர்காழியில் வசித்து வந்தாள் வசந்தி.தானும் தன் மகள் ராணியும் யாருக்கும் தொல்லையாக இருந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள், வசந்தி. வருமானத்திற்காக பெட்டிக் கடை ஒன்றை நடத்தி வந்தாள்.                 ‌‌                             கணவனை இழந்து, ஒரு வருடம் கழித்து தன் மகளின் விருப்பத்திற்காக தன் அண்ணனைக் காணச் சென்றாள். தன் அண்ணனும் அண்ணியும் நடந்து கொண்ட விதம் வசந்தியைக் கவலைக்கு உள்ளாக்கியது. இனி,அண்ணன் வீட்டிற்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது என்பதைப் புரிந்து கொண்டாள் வசந்தி!                                                                                                 வசந்தியின் அண்ணன் மட்டுமல்ல,பல உறவினர்களும் அவளைக் கண்டதும்
பணத்திற்காகத் தான் வருகின்றனர் என்று எண்ணி வசந்தியைத் தவிர்க்க முற்படுவர்.வசந்தி  ஒரு நாளும் பணத்திற்காக பிறரிடம் கையேந்தியது இல்லை.                                                                                     தன்னைத் தன் உறவினர்கள் தவறாக எண்ணுவதை அறிந்து அடிக்கடி வேதனைக் கொள்வாள் வசந்தி. தன் தாயின் அழுகையைப் பார்த்து வளர்ந்த ராணி, தன்னுடைய சொல்லோ, செயலோ பிறரைக் காயப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.                                                                             காரணமின்றி உறவினர்கள் வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்து வந்தனர், வசந்தியும் ராணியும்! உறவினரின் மகளின் திருமணத்திற்கு வசந்தி சென்றிருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் அண்ணனைக் கண்டார் வசந்தி. தன் அண்ணன் மீது பாசமும் மரியாதையும் கொண்டிருந்ததால் , "வாங்க அண்ணே! நல்லா இருக்கீங்களா! "என்று நலம் விசாரித்தார். அதுவரை சிரித்த முகத்துடன் இருந்த அண்ணன் ,சற்றுக் கோபமாக பணத்திற்காகத் தானே என்னிடம் வந்துப் பேசுகிறாய், என்னிடம் பணம் இல்லை என்றுக் கூறிவிட்டு சென்று விட்டார்.                                                            இதனைச் சற்றும் எதிர்பார்க்காத வசந்தி, வந்த அழுகையை மறைத்தாள் தன் புடவையில்! வீட்டிற்கு வந்து ராணியிடம் இனி நல்லது,கெட்டது எதற்கும் என் அண்ணன் வருவதை நான் விரும்பவில்லை என்று கூறி அழுதாள். நன்றாகப் படித்து அரசுக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் முடித்தாள் ராணி.                                                              வசந்தியின் தூரத்து உறவினரின் மகனுக்கும் ராணிக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. பணத்திற்காக தன்னைத் தொடர்பு கொள்வார் என எண்ணினார், அண்ணன். ஆனால் திருமணப் பத்திரிக்கையில் தாய்மாமன் பெயரும் இடம்பெறவில்லை. அவருக்கு அழைப்பும் விடுக்கவில்லை.           ‌‌.                            தன்னுடைய இறுதிச் சடங்கிற்குத்  தன் அண்ணனை அழைக்கக் கூடாது என்பதே வசந்தியின் விருப்பமாக இருந்தது.இதை அடிக்கடி தன் மகள் ராணியிடம் கூறுவாள். ஒரு நாள் வசந்தியின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராணியும் அவளது கணவரும் நல்ல முறையில் அவளைக் கவனித்துக் கொண்டனர்.                                                                   மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த ஒரு வாரத்தில் வசந்தி இறந்துவிட்டார்.ராணி, தன் தாயின் விருப்பத்திற்கேற்ப அவளது தாய் மாமாவிற்கு மட்டும் தாயின் இறப்புச் செய்தியைச் சொல்லவில்லை.                                   உறவினர் ஒருவர் தன் தங்கை இறந்து விட்டதைச் சொன்னபோது ஒரு கணம் அதிர்ச்சியுற்றார் அண்ணன்!தன் உடன் பிறந்த தங்கைக்குத் தான் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்ற உணர்ச்சி அவரை வாட்டியது. கடைசியாக ஒரு முறைத் தன் தங்கையின் முகத்தைக் காண வேண்டும் என்ற உள்ளுணர்வால் உடனடியாகத் தன் குடும்பத்துடன் கிளம்பினார்.                                                                            மாமா வந்து கொண்டிருப்பதாக உறவினர் ஒருவர், ராணியிடம் சொல்லிவிட்டுச் சென்றார். என்னப் பிரச்சனை வரப்போகிறது? என்ற ஆவலில் சில உறவினர்களும், பிரச்சினை வந்தால், சமாதானம் செய்வது எப்படி?என்று சில உறவினர்களும் யோசனையில் இருந்தனர்.                                                                                  குடும்பத்துடன் காரில் வந்து இறங்கினார் மாமா. அங்கிருந்த அனைவரும் ராணி என்ன செய்யப்போகிறாள் என்று அவளைப் பார்த்தனர். ராணியோ கண்ணீருடன் அனைவரையும் வரவேற்றாள்! அங்கிருந்த அனைவருக்கும் ராணியின் செயல் ஆச்சரியத்தைக் கொடுத்தது. தன் தங்கையின் முகம் பார்த்து கண்ணீர் வடித்தார் அண்ணன்.                                                         அனைத்துச் சடங்குகளும் முடிந்து வீட்டிற்கு செல்லத் தயாரானார், வசந்தியின் அண்ணன். ராணியைத் தனியாக அழைத்து,வசந்தியின் இறுதிச்சடங்கிற்குச் செலவழித்த தொகையைத் தான் தர விரும்புவதாகக் கூறினார்.ஒரு ரூபாய் கூட என் அம்மாவிற்காக நீங்கள் செலவு செய்ய வேண்டாம் என்று உறுதியாகக் கூறினாள் ராணி. இதே பணத்திற்காகத் தான் என் அம்மாவைப் பல இடங்களில் நீங்கள் அவமானப்படுத்தினீர்கள். என் அம்மாவின் ஒரே ஆசை அவர்களது இறுதிச் சடங்கில் நீங்கள் பங்கேற்காமல் இருப்பது மட்டுமே.நான் உங்களை இறுதிச்சடங்கிற்கு அனுமதித்ததற்குக் காரணம்,என் அம்மாவைப் போல் நீங்கள் யார் முன்னிலையிலும் அவமானப்படக் கூடாது என்பதற்காகத் தான். உயிரற்றுக் கிடக்கும் என் அம்மாவின் ஆசைக்காக,உயிரோடு இருக்கும் உங்களைக் காயப்படுத்த நான் விரும்பவில்லை..பலரின் சொற்களால் நாங்கள் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளானோம். அதேப்போல், துன்பமும் துயரமும் என்னால் பிறருக்கு நேரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றுக் கூறி அழுதாள் ராணி!                                                             "பணம் இல்லாவிட்டால் என்ன? எங்களுக்கும் மனம் இருக்கிறது. அதில் மானமும் இருக்கிறது "என்பதைச் சொல்லாமல் சொல்லியது ராணியின் கண்ணீர்!!!!!

Comments

Post a Comment