அம்மா நான் கிளம்புறேன் லேட்டாயிடுச்சு, என்றுச் சொல்லிவிட்டு தன் அலுவலகத்துக்குக் கிளம்பினான் அருண். 25 வயது இளைஞன் அருண். அப்பா சுந்தரம்,அம்மா பெயர் ராதிகா. வீட்டிற்கு ஒரே பையன் அருண். அதிக செல்லமாக வளர்க்கப்பட்டான்.அருணுக்கு பெண்பார்க்கும் வேலையை ஆரம்பித்தனர், அருணின் பெற்றோர். அருணுக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் சொந்த ஊரான மதுரையை விட்டு சென்னையில் வாடகைக்குக் குடியேறினர். அருணின் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் ராதா. அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.பெரிய பையனுக்கு ஆறு வயது ,இரண்டாவது மகளுக்கு வயது நான்கு.ராதாவின் கணவர் வீட்டிற்கு அருகில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். ராதாவும் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறாள். ராதாவின் மாமியார் இறந்து 2 மாதங்கள் ஆகின.அலுவலகத்துக்குச் செல்லும் முன் குழந்தைகளைப் பள்ளியில் விட்டு் விடுவாள். மாலையில் அவள் வரவுக்காக இரண்டு குழந்தைகளும் அவளது மாமனாரும் பசியுடன் காத்திருப்பர். எப்பொழுதும் ஓட்டமும் நடையுமாக காணப்படுவாள்,ராதா. அவள் நின்று பேசி அருணின் அம்மா ஒரு நாளும் பார்த்ததில்லை. இரண்டு நாட்களாக ராதாவைப் பார்க்காததால் அவளது வீட்டிற்குச் சென்றார் அருணின் அம்மா.சமையல் அறையில் மிகவும் சோர்வாக சமைத்துக் கொண்டிருந்தாள் ராதா. அருணின் அம்மாவைப் பார்த்ததும் வாங்கம்மா! உள்ள வந்து உட்காருங்க என்று கூப்பிட்டார்,ராதாவின் மாமனார். ராதா மிகவும் மெல்லிய குரலில் வாங்கம்மா !என்று கூறினாள். உடம்பு சரியில்லையா ராதா! என்று கேட்டார், அருணின் அம்மா. ஆமாம்மா !இரண்டு நாளாக ஜுரம், தலைவலி. ரெஸ்ட் எடுக்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்க?என்றார் அருணின் அம்மா. நேத்து ஹோட்டல்ல வாங்கி சாப்பிட்டோம். ஹோட்டல் சாப்பாடும் பிடிக்க மாட்டேங்குது. அவர் சமையல்கட்டு பக்கமே வந்தது இல்ல.அதனால தான் நானே சமைச்சுட்டு இருக்குறேன் மா !என்றாள் ராதா. நீ உட்காரு ராதா, நான் சமைத்து வைத்துவிட்டுப் போறேன் என்று உரிமையுடன் கூறி சமையல் வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு வந்தார்,அருணின் அம்மா. ராதாவின் வீட்டில் இருந்து வந்ததிலிருந்து தீவிர யோசனையில் இருந்தார் அருணின் அம்மா. என்ன ராதிகா!என்னாச்சு!எதையோ யோசித்துக் கொண்டே இருக்கிறாய் என்று கேட்டார் அருணின் அப்பா.ஒன்னும் இல்ல ,கடைக்குப் போய் ஒரு நோட்டு,பேனா ,பேப்பர் வாங்கிட்டு வந்துடுங்க என்று மட்டும் கூறினார் அருணின் அம்மா. நோட்டு, பேனா வாங்கி வந்ததில் இருந்து எதையோ எழுதிக் கொண்டே இருந்தார்,அருணின் அம்மா. இதைச் சற்று வித்தியாசமாக உணர்ந்தனர்,அருணும் அவனது அப்பாவும். சரியாக ஒரு வாரம் கழிந்தது. தினமும் வேலைக்குச் சென்று திரும்பும் நேரம் அருணின் வரவுக்காக ராதிகா வாசலிலேயே காத்துக் கொண்டிருப்பார்.வந்ததும் அருணுக்கு காபி போட்டுக் கொடுத்து தின்பதற்கு பலகாரம் ஏதாவது செய்து வைத்திருப்பார். ஆனால் இன்று வாசலில் அம்மா இல்லை. அதனால் வீட்டிற்குள் சென்று அம்மாவைத் தேடினான் அருண். என்னம்மா ஆச்சு!ஏன் படுத்து இருக்கீங்க? என்று கவலையுடன் கேட்டான்அருண்.ஒன்னும் இல்லப்பா,லேசாக தலைவலி, காலும் வலிக்குது. அதனாலதான் படுத்திருக்கேன் என்று கூறினார் அம்மா! சரிமா!ரெஸ்ட் எடுங்க!என்றுச் சொல்லி விட்டு எழுந்திருக்க முற்பட்டான்,அருண். கொஞ்சம் நில்லுப்பா!. காபி போட்டு கொஞ்சம் எடுத்துட்டு வரியா ?என்று கேட்டார் அம்மா. சற்று அதிர்ச்சியுடன் திரும்பினான் அருண். என்னமா நீங்க! ,என்னைக் கிச்சன் பக்கமே விட்டது இல்லை. எனக்கு எப்படி மா காபி போடத் தெரியும்? என்று குழப்பத்துடன் கேட்டான் அருண் . இந்த நோட்டைப் பிடி," இதுல காபி எப்படி போடணும் ,சட்னி எப்படி அரைக்கணும்,சாம்பார் எப்படி வைக்கணும்னு,எழுதி வச்சிருக்கேன்,அதை பார்த்து கொஞ்சம்போட்டுட்டு வா!"என்று கூறினார் , அம்மா! ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் அம்மா தன்னை வேலை செய்யச் சொல்வதாக எண்ணினான்,அருண்! எதற்காக இப்படி என்றுக் குழப்பத்துடன் புதிராகத் தோன்றிய அம்மாவைப் பார்த்தனர், அருணும் அவனது அப்பாவும். அவர்களது எண்ணங்களைப் புரிந்துகொண்டு பேசத் தொடங்கினார் அம்மா.எங்களுக்கு ஒரே மகன் என்பதால் மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து விட்டோம். எந்த வீட்டு வேலையையும் உன்னை நாங்கள் செய்யச் சொன்னது இல்லை. கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் இக்காலகட்டத்தில் நீயும் வீட்டு வேலைகளை செய்யப் பழகி இருந்தால் உன் எதிர்காலத்திற்கும் உன்னை நம்பி வரும் உன் மனைவி,குழந்தைகளுக்கும் உதவியாக இருக்கும். கணவன் மனைவி இருவரும் வேலைகளைப் பகிர்ந்து கொண்டு செய்தால் சிறந்த இல்லறம் அமையும்.ஆனால் செய்யும் வேலையைக் கணக்கு வைத்துக்கொண்டு சொல்லிக்காட்டி விடாதே!, செய்ததைச் சொல்லிக் காட்டுவது மிகவும் தவறான செயல்!என்று மகனைத் திருமணத்திற்கு தயார் செய்தார் அம்மா. எந்தப் பொருள் எந்தெந்த இடத்தில் உள்ளது என ஒரு காகிதத்தில் எழுதித் தயாராக வைத்திருந்தார் அம்மா. அலுவலகத்தில் பிரமோஷனுக்காக தெரியாத பல புதிய வேலைகளைக் கற்றுக் கொள்ளும் அதே ஆர்வம்,வீட்டிலும் தெரியாத வேலைகளைச் செய்வதில் காட்ட வேண்டும், என்று அதிரடியாக் கூறிய அம்மாவிடம், இந்தக் காகிதத்தைப் பிரிட்ஜின் மேல் ஒட்டலாம் என்று ஆர்வமுடன் கூறினான் அருண். மகனின் புரிதல் அம்மாவிற்கு ஆனந்தத்தைத் தந்தது. இதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அருணின் அப்பாவிடம்,இதுநாள்வரையில் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் நானே செய்துப் பழகிவிட்டேன். இனிவரும் காலங்களில் இதே நிலைத் தொடரும் என்று கூறிவிட முடியாது. யாரையும் எதிர்பார்த்து நாம் வாழக்கூடாது. நம்மால் முடிந்த வரை நமக்குத் தேவையானவைகளை நாமே செய்து கொள்ளப் பழக வேண்டும் என்றுக் கூறிய மனைவியின் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டு சமையலறையில் நுழைந்தார், அருணின் அப்பா!!!.
சிறுகதைகள் மற்றும் தொடக்கக் கல்வி சம்பந்தமான பதிவுகளைக் காணலாம்....
நல்ல பதிவு தோழி
ReplyDeleteமுடிவு மிகவும் அருமை. இன்றைய யதார்த்த நிலையை அழகாக பிரதிபலிக்கிறது கதை. கதாசிரியருக்கு பாராட்டுக்கள்!
ReplyDeleteக.குணசேகரன்