Skip to main content

இன்னுமொரு கருத்தம்மா...

சேகர் வீட்டிற்கு ஒரே பையன். தையல் கடை வைத்து நடத்தி வந்தார். சேகருக்கு மீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு யமுனா என்ற பெண் பிறந்தாள். மீனா இரண்டாவதாக கருவுற்றிருந்தாள். அனைத்து பெற்றோருக்கும் ஏற்படும் எண்ணம் போலவே அவர்களுக்கும் ஒரு பெண் இருப்பதால் இரண்டாவதாக பையன் தான் பிறக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தனர். அதற்கேற்றார்போல் மீனாவும் முதல் குழந்தைக்கும் இப்போது உள்ள குழந்தைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதனால் கண்டிப்பாக பையன் தான் பிறப்பான் என நம்பிக்கையுடன் கூறினாள்.                           ‌‌.           இருவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். சேகருடைய அதிகபட்ச ஆசை அவருக்கு பையன் பிறக்க வேண்டும் என்பதே.                                                                      பேறுகாலம் வந்தது. மீனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தைப்  பிறந்தது. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் ஏமாற்றமாக இருந்தது.                                  சேகரால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மருத்துவமனையில் இருந்து நேராக வீட்டிற்குச் சென்றார். 3 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. தனது தையல் கடையையும் திறக்கவில்லை.                                                               மீனாவின் மாமியார்தான் மீனாவை மருத்துவமனையில் கவனித்துக்கண்டார்.வீட்டிற்கு வந்ததும் குழந்தைக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் சேகர் வாங்கிக் கொடுத்தார்.                                                   தனக்கு ஆண் குழந்தை இல்லை என்ற ஏக்கம் எப்போதும் சேகருக்கு இருந்து வந்தது. அந்த ஏக்கத்தில் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றவில்லை.                                                        வீட்டிற்கு வரும் உறவினர்கள் ஆளுக்கு ஒரு பெயரைச் சொல்லி விட்டுச் செல்வர் ,இந்தப் பெயரை வையுங்கள் அந்தப் பெயரை வையுங்கள் என்று. இப்படியே மூன்று மாதங்கள் கழிந்தன.இனி நாமே ஒரு பெயரை வைக்கலாம் என முடிவெடுத்தாள் மீனா.                                                                                  என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் மீனா.அன்புடனும் கண்டிப்புடனும் நடந்து கொள்ளும் தன் வகுப்பு ஆசிரியரின் ஞாபகம் அவளுக்கு வந்தது.உடனே தன் மகளுக்கு அந்த வகுப்பு ஆசிரியரின் பெயரான ராணி என்ற பெயரைச் சூட்டினாள்.                                        பிள்ளைகள் வளர்ப்பில் எந்தக் குறையையும் வைக்கவில்லை பெற்றோர் இருவரும். காலங்கள் உருண்டோடியது. மீனா தன் கணவரை அடிக்கடி கிண்டல் செய்வாள். ராணி ,நீ பிறந்ததும் உன் அப்பா உன்னையும் பார்க்கவில்லை என்னையும் பார்க்கவில்லை என்று.                         ராணியோ,  என் அப்பா அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார் என்று எப்பொழுதும் தன் அப்பாவின் பக்கம் தான் பேசுவாள். ஏனெனில் தன் கண்ணின் மணிகள் போல தனது இரு  மகள்களையும் மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்தார் சேகர்.யமுனாவும் ராணியும் தன் குடும்ப நிலையை அறிந்து நன்றாக படித்தார்கள்.                                                                     யமுனா தன் அப்பாவின் தையல் கடையை நவீனமாக்கினாள். ராணியோ அவள் அம்மாவின் கனவின் படி ஒரு ஆசிரியை ஆனாள். யமுனாவுக்கு வெளிநாட்டில் வேலை செய்பவருடன் திருமணம் நடந்து வெளிநாட்டில் குடியேறினாள்.                                    ராணி  தன் பெற்றோருக்குத் துணையாக இருக்க ஒப்புக் கொள்பவரைத்  தேடிக் கரம் பிடித்தாள். நல்ல முறையில் தன் மகள்களை வளர்த்த சேகருக்கும் மீனாவுக்கும் தனக்கு மகன் இல்லை என்ற குறை இப்போது இல்லாமல் போனது.....

Comments